கொழும்பில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு, ஒன்று முதல் இரண்டு மணித்தியாலங்களுக்குள் 129 முதல் 150 மில்லிமீற்றர் வரை பெய்த கடும் மழையே முக்கிய காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பின் கால்வாய் மற்றும் வடிகால் வலையமைப்பு மொத்தம் 469 கிலோமீற்றர் நீளமானது. இதில், 2014ஆம் ஆண்டிலிருந்து சுமார் 20 கிலோமீற்றர் மட்டுமே அதிக மழைவீழ்ச்சியைத் தாங்கும் வகையில் புனரமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தற்போதைய வடிகால் கட்டமைப்பு மணித்தியாலத்துக்கு 30 மில்லிமீற்றர் மழையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட பகுதிகள் மணித்தியாலத்துக்கு 102 மில்லிமீற்றர் வரையான மழையைத் தாங்கக்கூடியவை என்றும், அப்பகுதிகளில் வெள்ளநீர் சில மணித்தியாலங்களுக்குள் வடிந்துவிடுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அனுமதியற்ற கட்டடங்கள், முறையற்ற நகர அபிவிருத்தி மற்றும் வடிகால்களில் கழிவுகளைக் கொட்டுவது ஆகியவையும் வெள்ளப்பெருக்குக்குக் காரணமாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள நோரிஸ் கால்வாயைச் சுத்தப்படுத்துவதற்காக மேலும் எட்டு குடும்பங்கள் இடம்பெயர வேண்டியுள்ளதாகவும், அவர்களுக்காக 11 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகை தயாராக உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், பொதுமக்கள் மக்காத கழிவுகளைக் கால்வாய்களிலும் வடிகால்களிலும் வீசுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.