
நக்கிள்ஸ் மலைப்பகுதியில் குழந்தையுடன் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி தொடர்பான விசாரணையில், அவரைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இரு ஆண்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 36 மற்றும் 23 வயதுடைய இருவரும் மாமன்–மருமகன் உறவுமுறையைக் கொண்டவர்கள் எனப் பொலிஸ் தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
விசாரணையில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள்
36 வயதுடைய சந்தேகநபர், 2023ஆம் ஆண்டில் சிறுமியை முதன்முதலாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் 23 வயதுடைய சந்தேகநபரும் அவரைத் துஷ்பிரயோகம் செய்ததாகவும், இருவரும் பல சந்தர்ப்பங்களில் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமி கர்ப்பமடைந்த பின்னர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்குக் குழந்தை பிறந்ததாகவும் விசாரணைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. குழந்தை பிறந்த பின்னரும் துஷ்பிரயோகம் தொடர்ந்ததாகத் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறுமிக்கும் குழந்தைக்கும் மருத்துவப் பராமரிப்பு
காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்த சிறுமியையும் அவரது குழந்தையையும் உடுதும்பர பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் கண்டுபிடித்தனர். மீட்கப்பட்ட இருவரும் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
சிறுமி மற்றும் குழந்தையின் பாதுகாப்பையும் எதிர்கால நலனையும் உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் தெரிவித்துள்ளார்.
👉 மேலும் செய்திகளுக்கு Jaffna Visiting பக்கத்தைப் பின்தொடருங்கள்