
மட்டக்களப்பு அம்பிளாந்துறை பகுதியில் விசா காலாவதியான நிலையில் இலங்கையில் தங்கியிருந்த மலேசியப் பெண் ஒருவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் நேற்று (18) இரவு சுமார் 8.30 மணியளவில் அம்பிளாந்துறை பிள்ளையார் கோவில் வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை அவசர இலக்கமான 119 இற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பிளாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் மலேசியப் பெண் ஒருவர் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, குறித்த பெண் கடந்த 10.05.2026 அன்று சுற்றுலா விசாவில் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. பின்னர், அம்பிளாந்துறை பகுதியில் வசிக்கும் தனது நண்பர்களின் வீட்டில் அவர் தங்கியிருந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்ததால் நாடு திரும்ப முடியாத நிலை!
இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில் தவறி விழுந்து வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுலா விசா கடந்த 08.09.2026 அன்று காலாவதியாகியுள்ளது.
உடல்நலப் பாதிப்பு காரணமாக உரிய காலத்தில் மீண்டும் மலேசியாவுக்குத் திரும்ப முடியாத நிலையில், தனது விசா காலாவதியானதையும் அவர் கவனிக்கத் தவறியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பெண் தொடர்பான தகவல் சிலரால் 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.