முல்லைத்தீவில் தனது இல்லத்தில் தங்கியிருந்த 17 வயது மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில், இந்துக் கோயில் பூசகர் ஒருவருக்கு எதிரான குற்றத்தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

எனினும், வவுனியா மேல் நீதிமன்றம் விதித்திருந்த 17 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் 13 ஆண்டுகளாகக் குறைத்துள்ளது. நீதியரசர்கள் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு நவம்பர் 20ஆம் திகதி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கல்விக்காகத் தங்கியிருந்த மாணவி

தீர்ப்பு விவரங்களை மேற்கோள்காட்டி வெளியான செய்தியின்படி, போரினால் இடம்பெயர்ந்து முகாமில் வசித்துவந்த மாணவி, உயர்தர வகுப்புகளில் கல்வி கற்பதற்காக 2011 ஓகஸ்ட் மாதம் குறித்த பூசகரின் இல்லத்தில் தங்கியுள்ளார்.

2011 நவம்பர் மாதம் அங்கு அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தை வெளியே தெரிவித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சுறுத்தப்பட்டதாகவும் மாணவியின் சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதியான தொடர்பு

சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர், முகாமில் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதைக் கவனித்துள்ளனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் நடத்தப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனையில், மாணவிக்குப் பிறந்த குழந்தையின் உயிரியல் தந்தை அவரே என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகத் தீர்ப்பு தொடர்பான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு

வழக்கை விசாரித்த வவுனியா மேல் நீதிமன்றம், பாலியல் வல்லுறவுக் குற்றத்திற்காக அவரைக் குற்றவாளியாகக் கண்டது. அவருக்கு 17 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.

அத்துடன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு மூன்று இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது. தனியான மற்றொரு வல்லுறவு முயற்சியை நிரூபிக்கப் போதிய சாட்சியங்கள் இல்லை என்பதால், அந்தக் குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

தண்டனைக் குறைப்புக்கான காரணங்கள்

குற்றத்தீர்ப்புக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டைப் பரிசீலித்த நீதிமன்றம், மாணவியின் சாட்சியை நம்பகமானதாக ஏற்ற மேல் நீதிமன்றத்தின் முடிவில் தலையிடக் காரணமில்லை எனக் கண்டுள்ளது.

அதேவேளை, அவர் முதல் தடவையாகக் குற்றத்தீர்ப்புக்கு உள்ளானவர் என்பதையும், ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதையும் கருத்திற்கொண்டு சிறைத்தண்டனை 13 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறைத்தண்டனை, முதலில் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியிலிருந்து அமுலாகும். அபராதம், பாதிக்கப்பட்டவருக்கான நஷ்டஈடு மற்றும் அவற்றைச் செலுத்தத் தவறினால் அனுபவிக்க வேண்டிய சிறைத்தண்டனைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.