
சாதி தொடர்பான தகவல்களைக் குறிப்பிட்டு வெளியிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக வெளியான ஊடகச் செய்திகளை, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜின் அலுவலகம் மறுத்துள்ளது.
நவம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட விளக்க அறிக்கையில், அமைச்சரின் கருத்துகள் அவை தெரிவிக்கப்பட்ட சூழலிலிருந்து விலக்கப்பட்டு, தவறான தலைப்புகளுடன் செய்திகளாக வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி
பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதற்கான 16 நாட்கள் தேசிய வேலைத்திட்டத்தை விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, நவம்பர் 23ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
அந்தச் சந்திப்பில், சாதி உள்ளிட்ட சமூக அடையாளங்களைக் குறிப்பிடும் திருமண விளம்பரங்கள் சில சமூகப் பிரிவினருக்குப் பாகுபாடுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாக ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார். இவ்விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், திருமணம் போன்ற விடயங்களில் தனிப்பட்ட தெரிவுகளும் தீர்மானங்களும் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார் என அவரது அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் குறித்த கவலை
அதே சந்திப்பில், மூடநம்பிக்கைகள், வசியம் மற்றும் மாந்திரீகச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் குறித்தும் அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகைய விளம்பரங்கள் பொதுமக்களையும் இளம் தலைமுறையினரையும் தவறாக வழிநடத்துவதாக அவர் தெரிவித்திருந்தார். விளம்பரங்கள் மட்டுமன்றி, ஊடகம், கலை மற்றும் இலக்கியம் உள்ளிட்ட துறைகளிலும் சமூகப் பொறுப்புடன் செயற்படுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருந்தார்.
ஊடகங்களுக்கான ஒழுக்கநெறிக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாகப் பேசும்போதே, இவ்வாறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் அமைச்சர் குறிப்பிட்டதாக விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை அறிவிப்பு வெளியிடப்படவில்லை
திருமண விளம்பரங்களை ஒழுங்குபடுத்தவோ, சாதி குறிப்பிடும் விளம்பரங்களுக்குத் தடை விதிக்கவோ அமைச்சர் தனது கருத்துகள் மூலம் அறிவிக்கவில்லை என அவரது அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதேபோன்று, எந்தவொரு கலாசார அடையாளத்தையும் விமர்சிக்கும், கேள்விக்குட்படுத்தும் அல்லது தடைசெய்யும் நோக்கத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, திருமண விளம்பரங்களுக்கான புதிய தடை அறிவிப்பாக அமைச்சரின் கருத்துகளைப் புரிந்துகொள்ளக்கூடாது என்பதே அலுவலகம் வழங்கியுள்ள விளக்கமாகும்.