ஆசிய கிரிக்கெட் பேரவையின் (ACC) 2026 ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியும் நடப்புச் சம்பியனான பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியும் இன்று (29) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

கத்தாரின் தோஹாவிலுள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

நான்காவது சம்பியன் பட்டத்தை நோக்கி பாகிஸ்தான்

இதுவரை நடைபெற்ற ஏழு தொடர்களில் மூன்று முறை சம்பியன் பட்டத்தை வென்றுள்ள பாகிஸ்தான் அணி, இம்முறை நான்காவது சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கவுள்ளது.

2019 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 50 ஓவர் தொடர்களில் சம்பியன் பட்டத்தை வென்ற பாகிஸ்தான், கடந்த முறை நடைபெற்ற இருபதுக்கு 20 தொடரிலும் பங்களாதேஷ் ‘ஏ’ அணியை சுப்பர் ஓவரில் வீழ்த்தி சம்பியனாகியிருந்தது.

இத்தொடரின் வரலாற்றில் பாகிஸ்தான் அணி ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

தோல்வியறியாத பாகிஸ்தான் அணி

அப்துல் சமத் தலைமையிலான பாகிஸ்தான் அணி, குழுநிலைப் போட்டிகளில் ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா ‘ஏ’ மற்றும் நேபாளம் ஆகிய அணிகளை வீழ்த்தியிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ‘ஏ’ அணியை ஐந்து விக்கெட்டுகளால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

233 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்காக ஹசன் நவாஸ் மற்றும் ஷாஸைப் கான் அரைச்சதங்களைப் பெற்றனர். அணித்தலைவர் அப்துல் சமத் 44 ஓட்டங்களையும், பர்ஹான் யூசுப் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

சம்பியன் பட்டத்திற்காக இலங்கை அணி

இத்தொடரில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ள இலங்கை ‘ஏ’ அணிக்கு இன்றைய இறுதிப் போட்டி முக்கிய சவாலாக அமையவுள்ளது.

பாகிஸ்தான் அணி தனது நான்காவது சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுமா அல்லது இலங்கை அணி மகுடம் சூடுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.