பிறந்தநாள் வாழ்த்தை நள்ளிரவில் அனுப்ப வேண்டும் அல்லது மறுநாள் காலையில் ஒருவருக்கு முக்கிய தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்றால், இனி அந்த நேரம் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. செய்தியை முன்கூட்டியே தயாரித்து, விரும்பிய நேரத்தில் அனுப்புவதற்கான ‘Scheduled Messages’ வசதியை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது.

நவம்பர் 25ஆம் திகதி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பயனர்கள் அதிகம் கோரிய வசதிகளில் இதுவும் ஒன்று என நிறுவனம் தெரிவித்துள்ளது.

10 நிமிடங்கள் முதல் 14 நாட்கள் வரை

பயனர்கள் ஒரு செய்தியைத் தயாரித்து, குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்குப் பின்னர் முதல் அதிகபட்சம் 14 நாட்களுக்குள் அனுப்புவதற்குத் திட்டமிடலாம். தனிப்பட்ட உரையாடல்களிலும் குழு உரையாடல்களிலும் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.

குறுஞ்செய்திகள் மட்டுமன்றி, புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்புவதற்குத் திட்டமிடலாம். இதனால் வாழ்த்துகள், நினைவூட்டல்கள் மற்றும் குழுவினருக்கான தகவல்களை முன்கூட்டியே தயாரித்து வைக்க முடியும்.

செய்தியைத் திட்டமிடுவது எப்படி?

உரையாடலைத் திறந்து செய்தியைத் தட்டச்சு செய்த பின்னர், அனுப்பும் பொத்தானை அழுத்திப் பிடிக்க வேண்டும். தொடர்ந்து தோன்றும் தெரிவுகளில், செய்தி சென்றடைய வேண்டிய திகதியையும் நேரத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

திட்டமிடப்பட்ட செய்திகளை அனுப்புவதற்கு முன்னர் பார்வையிடவும் முடியும். பின்னர் மனதை மாற்றிக்கொண்டால், குறிப்பிட்ட நேரம் வருவதற்கு முன்பாக அந்தச் செய்தியை நீக்கலாம்.

பெறுநருக்கு அது வழக்கமான WhatsApp செய்தியைப் போன்றே தோன்றும் என நிறுவனம் விளக்கியுள்ளது.

தொலைபேசி அணைந்திருந்தாலும் அனுப்பப்படும்

செய்தியைத் திட்டமிட்ட பின்னர், அனுப்புநரின் தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது மின்கலச் சக்தி தீர்ந்திருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் செய்தி அனுப்பப்படும் என WhatsApp தெரிவித்துள்ளது.

மேலும், திட்டமிடப்பட்ட செய்திகளுக்கும் வழக்கமான தனிப்பட்ட செய்திகளைப் போன்று முனையிலிருந்து முனைக்கான மறையாக்கப் பாதுகாப்பு (End-to-End Encryption) தொடரும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

அனைவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காது

இந்த வசதி உலகளாவிய ரீதியில் எதிர்வரும் வாரங்களில் கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளது. எனவே, அறிவிப்பு வெளியாகிய உடனேயே அனைத்துப் பயனர்களின் கணக்குகளிலும் இந்தத் தெரிவு தோன்றாமல் இருக்கலாம்.

வெவ்வேறு நேர வலயங்களில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் செய்திகளை அனுப்புபவர்களுக்கும், முக்கிய தருணங்களில் தகவல் தெரிவிக்க முன்கூட்டியே திட்டமிடுபவர்களுக்கும் இந்த வசதி உதவியாக அமையும்.