சென்னையில் இரண்டு விலை உயர்ந்த செல்போன்கள் வரவேண்டிய பார்சலைத் திறந்தவருக்கு, அதற்குள் இனிப்புப் பெட்டி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை விசாரித்த பொலிஸார், பார்சலைக் கொண்டு சென்ற டெலிவரி ஊழியரைக் கைது செய்துள்ளனர்.

சென்னை மண்ணடியைச் சேர்ந்த சையத் அப்ரிடி என்பவருக்கு, அவரது தொழில் கூட்டாளி நுங்கம்பாக்கத்திலிருந்து இரண்டு செல்போன்களை அனுப்பியுள்ளார். கடந்த நவம்பர் 6ஆம் திகதி மாலை, ரேபிடோ இருசக்கர வாகனப் பார்சல் சேவை மூலம் அவை அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பார்சலைத் திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி

பார்சல் வந்து சேர்ந்ததும் அதனைத் திறந்து பார்த்த சையத் அப்ரிடி, உள்ளே செல்போன்கள் இல்லாததைக் கண்டுள்ளார். அவற்றுக்குப் பதிலாக இனிப்புப் பெட்டி வைக்கப்பட்டிருந்ததால், பார்சல் கொண்டு வரப்பட்ட வழியில் பொருட்கள் மாற்றப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகித்துள்ளார்.

இதையடுத்து, திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

வழியில் பார்சல் பிரிக்கப்பட்டதாகத் தகவல்

விசாரணைகளில், பார்சலை எடுத்துச் சென்ற வியாசர்பாடியைச் சேர்ந்த மனிஷ்குமார் என்ற டெலிவரி ஊழியருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாகப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

நுங்கம்பாக்கத்திலிருந்து திரு.வி.க. நகர் நோக்கிச் செல்லும் வழியில், அகரம் சந்திப்புக்கு அருகே பார்சலைப் பிரித்து இரண்டு செல்போன்களையும் எடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்னர், அவற்றுக்குப் பதிலாக இனிப்புப் பெட்டியை வைத்து பார்சலை ஒப்படைத்ததாக விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு செல்போன்களும் மீட்பு

இந்தச் சம்பவம் தொடர்பில் நவம்பர் 23ஆம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருடப்பட்டதாகக் கூறப்படும் சாம்சங் மற்றும் கூகுள் பிக்சல் செல்போன்கள் இரண்டையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

விசாரணைக்குப் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.