
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (நவம்பர் 25) நிராகரித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையைத் தளர்த்தி, மருத்துவத் தேவைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரியிருந்தனர். மனுவைப் பரிசீலித்த கோட்டை நீதவான் பாசன் அமரசேன, கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக சிகிச்சைக்காக அனுமதி கோரல்
சிங்கப்பூரில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்சவுக்கு அங்கு மேலதிக மருத்துவப் பரிசோதனைகளும் சிகிச்சையும் தேவைப்படுவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இதற்காகவே வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி இந்த மனு தொடர்பான விடயம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தை நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் முன்னிலையான கோட்டாபய
கோரிக்கை தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்ட இன்றைய தினம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளதால், சிங்கப்பூர் செல்வதற்காகக் கோரப்பட்ட தற்காலிக அனுமதி கிடைக்கவில்லை. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடை தொடர்கிறது.
இன்றைய உத்தரவு, மருத்துவப் பயணத்திற்காகத் தடையைத் தற்காலிகமாக நீக்கக் கோரிய மனு தொடர்பானதாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பிரதான விசாரணையின் இறுதித் தீர்ப்பாக இதனைக் கருத முடியாது.